Monday, September 7, 2009

வீரன் வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் ோராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொ ன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு
அந்நாளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது . வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

புதுவையில் விஞ்சி புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. இந்தியர்கள் நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சி முடிவு செய்தார்.

கலெக்டர் ஆஷ் கொலை
1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.

பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற வரலாற்றுச் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

Saturday, September 5, 2009

மதன்லால் திங்க்ரா

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை - நூற்றாண்டு நினைவுகள்


"நான் அவன் சகோதரனே இல்லையாக்கும். எனக்கு அப்படி ஒரு சகோதரன் இருந்ததையே மறந்துவிடப் போகிறேன். இதோ அவனோடு இணைக்கப்பட்டதால் எங்கள் குடும்பப் பெயரையே துறந்துவிடப் போகிறேன்.”
இலண்டனின் ஆகஸ்ட் மாதக் குளிர்க் காற்றுக்கு இதமாக கணப்பின் அருகே கைகளை வைத்துத் தேய்த்தபடி பஜன்லால் தன் ஆங்கிலேய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான், “ஒரு கொலைகாரனின் சகோதரன் என்பதே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. என் தந்தையார், அவன் என் மகனே அல்ல என்றும் அவனது உடலை எங்கள் குடும்பத்துக்கு அனுப்பி எங்களை அவமானப்படுத்தவேண்டாம் என்றும் மாட்சிமை தாங்கிய அரசருக்கு மனு அனுப்பிவிட்டார்.”

அதே நேரத்தில் அதே இலண்டனில் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் உச்சாணிப் பிரமுகர்கள் ஓர் அறையில் அதே கொலைகாரனைக் குறித்து, பேசிக்கொண்டிருந்தார்கள். “ஒரு தேசபக்தன் என்கிற விதத்தில் அவனை மதிக்கத்தான் வேண்டி இருக்கிறது,” என்றார் இலையாட் ஜியார்ஜ் (Lloyd George). அருகே அமர்ந்திருந்த பருமனான மனிதர் தலையாட்டினார்; “அவன் அன்று நீதிமன்றத்தில் பேசினானே… என்னைக் கேட்டால் தேசபக்தியின் பெயரில் நான் கேட்ட பேச்சுகளிலேயே மிகவும் அற்புதமான உரை அதுதான். நாம் ரெகுலஸையும் காரக்டாக்கஸையும் புளூடார்க்கின் வீரநாயகர்களையும் நம் நினைவில் வைத்திருப்பது போலவே அவனது பெயரையும் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் இந்தியர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவனது பேச்சை நாம் வெளியில் வராமல் தடுத்துவிட்டோம் அல்லவா? …” அந்தப் பருமனான மனிதர்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகப் போகும் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர். சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.

சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்.

இந்திய தேசபக்தர்களுக்கு கடுமையான தண்டனைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டு வந்த காலகட்டம் அது. இந்தத் தண்டனைகளில் முக்கிய பொறுப்பதிகாரியாக விளங்கியவன் கர்ஸன் வில்லி. இந்திய இம்பீரியல் செண்டரில் நடக்கும் விசுவாசமான இந்திய பிரஜைகளுக்கான கூட்டத்தில் அவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஜூலை 1, 1909 அன்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதன்லால் திங்க்ரா சென்றார். நீலநிற பஞ்சாபித் தலைப்பாகையுடன் சென்ற அவர் கர்ஸான் வில்லியை ( Curzon Wyllie) நேருக்கு நேராகச் சுட்டு எமனுலகு அனுப்பினார். கூட்டம் பதறிச் சிதறி ஓடியது; திங்க்ரா போலிஸ் வரும்வரை நின்றார். பின்னர் செய்தியாளர்கள் எழுதினார்கள்: “அந்தக் கூட்டத்திலேயே அமைதியுடன் காணப்பட்டது திங்க்ரா மட்டும்தான்” திங்க்ரா நினைத்திருந்தால் அங்கிருந்த மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம். ஐரிஷ் புரட்சியாளர்கள் உதவியுடன் தப்பிச்சென்று பிரான்ஸில் அரசியல் அகதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் திங்க்ரா அதனைச் செய்யவில்லை. இலண்டனிலேயே இந்திய தேசியத்தின் சிங்க முழக்கத்தைக் கேட்கச்செய்துவிட்டார் திங்க்ரா.

பிரிட்டிஷ் கவிஞர் வில்ப்ரைய்ட் ஸ்காவென் ப்ளண்ட், (பிரிட்டிஷ் ராஜ்ஜிய விவகாரத் துறை உயர்பதவி வகித்தவர்) எழுதினார்: “எந்த ஒரு கிறிஸ்தவ இறைசாட்சியும் தனக்கு எதிரான தீர்ப்பினை இத்தனை மாட்சிமையுடனும் அச்சமின்மையுடனும் எதிர்நோக்கியதில்லை… இந்தியா இவரைப் போல 500 இளைஞர்களை உருவாக்கினால் நிச்சயமாக விடுதலையை அடைந்துவிடும். அந்த விசாரணையின் போது மருத்துவ அதிகாரி மதன்லால் திங்க்ராவின் நாடித் துடிப்பு கூட முதலில் இருந்து இறுதிவரை தனது இயல்பு நிலையிலிருந்து மாறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.” ஐரிஷ்காரரான ப்ளண்டின் 69 ஆவது பிறந்தநாளும் மதன்லால் திங்க்ராவின் பலிதான தினமும் ஒன்றாக அமைந்தது. “என்னை திங்க்ரா பெருமைப்படுத்திவிட்டார்; இந்த நாள் இனி விடுதலை வீரர்களின் தியாகங்களின் நினைவுதினமாக அனுசரிக்கப்படும்” என அறிவித்தார் ப்ளண்ட்.

மதன்லால் திங்க்ராவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியது: “தண்டனை அறிவிக்கப்பட்ட போது கொலைகாரன் எவ்வித சலனமும் இன்றி இருந்தது அவனது மாட்சிமைக்குச் சாட்சியாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டு விசாரணைகளில் காணப்பட முடியாத அம்சம் இது. விசாரணைக் கூண்டிலிருந்து திங்க்ரா புன்னகையுடன் வெளியேறியதைக் காணமுடிந்தது.”

ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

இறுதி ஆசைகள் குறித்த கேள்விகளை நிராகரித்து நடந்தவர் முகத்தை மூடும் துணியையும் நிராகரித்தார். பிரிட்டிஷ் தலையாரி பியர்பாயிண்ட்டுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவரே தூக்குக் கயிறை முத்தமிட்டு கழுத்தில் சூடிக்கொண்டார். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்பட்டது. பிரிட்டிஷ் விதிகளின் படி அரைமணிநேரம் சடலம் தொங்கிய பிறகு எடுத்து வரப்பட்டது. மரண சான்றிதழ் வழங்கும் இடத்தில் சாவர்க்கரும் இருந்தார். மதன்லால் திங்க்ராவின் பூத உடலில் புன்னகை உறைந்திருந்தது. ஹிந்து முறைப்படி தகனம் செய்ய திங்க்ராவின் தோழர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அரசுக்கான இராஜ விசுவாசத்துடன் அவரது உடலை வாங்க மறுத்துவிட்ட நிலையில் அவரது உடல் சிறையில் புதைக்கப்பட்டது.

பாரிஸில் இருந்த சர்தார் சிங் ராணாவுக்கு மதன்லால் திங்க்ராவின் இறுதி அறிக்கை சென்றது. மதன்லால் திங்க்ரா தூக்கிலிடப்பட்ட அன்று (17 ஆகஸ்ட், 1909) அவருடைய படத்துடன் வந்தே மாதரம் எழுதித் திகழ அதன் கீழ் இந்த அறிக்கை வெளியானது. இலண்டனிலும் அவை வெளிப்பட்டன. விரைவில் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டன. அரசாங்கம் கருமசிரத்தையாக அதனைத் தடை செய்தது. “சவால்” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கை கூறியது:

"நான் கருணையை யாசிக்கப்போவதில்லை. உங்களுக்கு என் மீது எந்த அதிகாரமும் இல்லை. எப்படி ஜெர்மனி இங்கிலாந்தை ஆளமுடியாதோ அது போல பாரதத்தை இங்கிலாந்து ஆள முடியாது; கூடாது. நான் அன்று ஆங்கில இரத்தத்தை சிந்த வைத்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது அடக்கத்துடன் நான் என் இந்திய தேசத்தின் தேசபக்த இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனைகளையும் நாடுகடத்தல் தண்டனைகளையும் அளித்து வந்தமைக்கான ஒரு எளிய பழிவாங்கும் முயற்சியே ஆகும். இந்த முயற்சியில் நான் என் மனசாட்சியைத் தவிர வேறு எவராலும் தூண்டப்படவில்லை என்பதனை சொல்லிக்கொள்கிறேன். நான் என் கடமையை செய்தேனே தவிர வேறு எவருடனும் சதியாலோசனை செய்யவில்லை.

அன்னியத் துப்பாக்கிகளால் அடக்கப்பட்டிருக்கும் ஒரு தேசமானது நிரந்தரப் போரில் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு வெளிப்படையான யுத்தம் சாத்தியமில்லை. எனவே நான் எதிர்பாராத நேரத்தில் தாக்கினேன். போர் துப்பாக்கிகள் மறுக்கப்பட்டதால் நான் என் கைத்துப்பாக்கியால் தாக்கினேன்.

ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்யப்படும் சேவை. புத்திபலத்திலும் உடல்பலத்திலும் சக்தியில்லாத என்னைப் போன்ற ஒரு மைந்தன் என் அன்னைக்கு என் உதிரத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட இயலும்? எனவே என் இரத்தத்தை அவள் சந்நிதியில் நான் சமர்ப்பித்தேன்.

இந்த விடுதலை யுத்தமானது பாரதத்துக்கும் இங்கிலாந்துக்குமிடையே தொடரும். ஆங்கிலேயர் எனும் இனத்துக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே இந்த இயற்கைக்கு முரணான ஏற்பாடு இருக்கும் பட்சத்தில் அந்த இரு இனங்களும் இருக்கும் வரை இந்தப் போராட்டம் முடிவின்றித் தொடரும்.

இறைவனிடம் என் ஒரே பிரார்த்தனை இதுதான்– நான் என் தேசத்துக்காக மீண்டும் இதே தேச அன்னைக்குப் பிறப்பேனாக. மீண்டும் இதே புண்ணிய கைங்கரியத்தில் மரணத்தைத் தழுவுவேனாக. உலக மானுடம் அனைத்துக்கும் அவள் நன்மையை அருளவும் ஈஸ்வரனின் மகோன்னதத்தை பிரகடனப்படுத்தவும், அவள் விடுதலையை அடையும்வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து இதே கைங்கரியத்துக்காக மரணத்தைத் தழுவுவேனாக. இன்று என் பாரத தேசம் படித்துக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் எப்படி தேசத்துக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அதனை கற்பிக்க ஒரே வழி, நாமே அந்தப் பாதையை ஏற்று வழிகாட்டுவதுதான். எனவே நான் மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன் அந்தப் பிராண தியாகத்தில் பிரகாசிக்கிறேன். வந்தே மாதரம்."

இன்று பாரத அன்னையின் விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரனின் நூறாவது பலிதான தினம். இரண்டாயிரம் ஆண்டுகள் இந்தியர்கள் இவரது நினைவைக் கொண்டாடுவார்கள் என அன்னியனையே வியந்து சொல்லவைத்த அந்த வீர மைந்தனின் நூறாவது பலிதான தினம். இந்தத் தேசத்தின் விடுதலையின்பால் கொண்ட அன்பினால், பிறந்த குடும்பத்தால் நினைவு துறக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, உறவு அறுக்கப்பட்டு, அனாதையாகப் புதைக்கப்பட்ட வீரனின் நினைவுதினம். நாம் அவரை நினைவில் வைத்திருக்கிறோமா? இத்தகைய தியாகங்களால் பெறப்பட்ட விடுதலைக்கு நாம் பாத்தியர்களாக இருக்கிறோமா? நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு உப்புக் கல்லிலும் உறைந்திருப்பது வீரத் தியாகிகளின் உதிரமும் வியர்வையும் அவர்களை நேசித்தோர் சிந்திய கண்ணீரும். அதனை நாம் எண்ணிப் பார்க்கிறோமா? மதன்லால் திங்க்ராவின் நூறாவது நினைவுதினத்தன்று ஒவ்வொரு பாரத மைந்தனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

Thanks to : Tamilhindu