Saturday, September 24, 2011

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்

ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன்(European Organization for Nuclear Research :CERN) ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.

தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த சார்புக் கொள்கையில்(Theory of Relativity) தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.

இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.

ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ் கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.

The Large Hadron Collider [EPA]

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.

தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.